Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து அமைதி பேரணி புறப்பட்டது. அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.

சென்னை வாலாஜா சாலை வழியாக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதிப் பேரணி சென்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், அனைத்து எம்பி.க்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், எம்.கே.மோகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, டாக்டர் எழிலன், ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், வெற்றியழகன், அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், இணை செயலாளர் பி.டி.பாண்டி செல்வம், வி.பி.மணி, பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன், மா.பா.அன்புதுரை, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரிதா தங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பலர் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். மேலும், கலைஞர் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் பேரணி நடந்த இடங்களில் காட்சிகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்தடைந்தது. அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞர் உருவம் தத்ரூபமாக மலர்களால் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கலைஞரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும், முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை, உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

* 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு திமுக மாற்றுத்திறனாளிகள் அணி தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவருமான ரெ.தங்கம் தலைமையில் அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து கலைஞர் நினைவிடம் வரை இணைப்பு சக்கர (ஸ்கூட்டி) வாகனத்தில் அமைதி பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

* இலக்கை நோக்கி வெற்றி பாதையில் நடைபோடுவோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: கலைஞர்-முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக காத்திட-முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்”-“எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.