தமிழ் மண்ணை விடுவிக்க நாள்தோறும் ஒலித்த திராவிட போர்க்குரல்; எளிய மக்களை காத்து நின்ற தாய்நிகர் தலைவர்: கலைஞர் நினைவுநாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்னை: அறியாமைச் சிறையில் இருந்து தமிழ் மண்ணை விடுவிக்க நாள்தோறும் ஒலித்த திராவிட போர்க்குரல் என கலைஞர் நினைவுநாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழரையும் தமிழ்நாட்டையும் வாட்டிய கொடுமைகளை அஞ்சாமல் எதிர்த்த பேனா முனை!
அறியாமைச் சிறையில் இருந்து தமிழ் மண்ணை விடுவிக்க நாள்தோறும் ஒலித்த திராவிட போர்க்குரல்!
ஆதிக்கத்தின் கோரப்பற்கள் தீண்டாமல் எளிய மக்களை காத்து நின்ற தாய்நிகர் தலைவர்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாள் இன்று!
டெல்லியை ஆக்கிரமித்து, தேர்தல் முறைகளையும் சிதைத்து, மக்களை அச்சத்தின் பிடியில் ஆளலாம் என்று நினைக்கும் பாசிசம் தமிழ்நாட்டில் மட்டும் சறுக்கக் காரணம் தி.மு.கழகம்.
இப்படிப்பட்ட பெருமைமிகு நம் கழகத்தை 50 ஆண்டுகாலம் தலைமையேற்று வழிநடத்தி, 75 ஆண்டுகால களப்பணி - இடைவிடாத சமூகப் பணியின் மூலம் வரலாறாகவே வாழ்ந்தவர் கலைஞர்!
முதலமைச்சர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் கலைஞர் காட்டிய வழியில் நடைபோடுவோம், ஆதிக்கச் சக்திகளை துடைத்தெறிவோம்.
2026ல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க, கலைஞர் நினைவு நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலைஞரின் நினைவைப் போற்றுவோம்: செல்வப்பெருந்தகை
முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்தும் நிறைந்தும் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது ஆகஸ்ட் 7 ஆம் நாள் நினைவுக்கு வருகிறதே தவிர மற்ற நாட்களில் எல்லாம் அவர் இருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற நினைவே இருக்கிறது. அவர் விட்டு சென்ற இடத்தை அனைத்து வகையிலும நிரப்பக் கூடியவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.கலைஞர் என்பவர் 1924 ஆம் ஆண்டு பிறந்து 2018 ஆம் ஆண்டில் நிறைவுற்றவர் என்பதல்ல அவரது வரலாறு. வெறும் எண்ணால் தீர்மானிக்கப்பட்டதல்ல அவரது வாழ்க்கை. தமிழ்நாடு உயர்வடைய அவருடைய எண்ணங்களால் தீர்மானிக்கப்பட்டது அவருடைய வாழ்க்கை.
ஹரிநாராயண்டாகுர் என்கிற ஆய்வாளர் இந்தியில் எழுதிய கட்டுரையில், 'ராம்மனோகர் லோகியாவுக்குப் பிறகு தெற்கில் கலைஞர் கருணாநிதியும். வடக்கில் கர்பூரி தாகூரும் சமுதாய நலன் சார்ந்தவர்களாக இருந்தார்கள்' என்று குறிப்பிட்டார்.கலைஞர் தனது வாழ்நாளில் அடையாத பெருமையை இப்போது நித்தமும் அடைந்து வருகிறார். அத்தகைய பெரும்புகழை நித்தமும் பெற்றுத்தந்து வருகிறார் முதலமைச்சர். கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே. கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே காலம் நகர்ந்து செல்கிறது!இன்று ஆகஸ்ட் 7 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாள். தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றுவோம்!