Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செயற்கை நுண்ணறிவின் கண்காணிப்பு: ரயில் பாதைகளில் பாதுகாக்கப்படும் யானைகள்

சென்னை: வனவிலங்குகள் பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனக்கோட்டம் சுமார் 693.48 சதுர கி.மீ வனப்பரப்பை கொண்டது. இது இந்தியாவின் மேற்கு கடற்கரையில் நீண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இதில் சமீப காலமாக மனித-யானை மோதல்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை, இடப்பெயர்வு வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள், மனித குடியிருப்புகள் விலங்குகளின் இடப்பெயர்வு பாதைகளில் ஆக்கிரமிப்பு, நிலப் பயன்பாட்டு முறைகள் மற்றும் விவசாய நடைமுறைகளில் மாற்றங்கள், யானைகள் பயிர்களை சேதப்படுத்துதல் போன்ற யானைகளின் நடத்தையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான எதிர்மறையான தொடர்புகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த காரணங்களால் இப்பகுதியில் மனித-யானை மோதல் அதிகரித்து வருகின்றன. கோவை வனக்கோட்டத்தில், கடந்த 2021 முதல் 2023 வரை என மூன்று ஆண்டுகளில், 9,028 முறை யானைகள் வழிதவறி காப்புக்காட்டை விட்டு வெளியேறியுள்ளன. கோவை வனக்கோட்டத்தில் முக்கிய மோதல் பிரச்னைகளில் ஒன்று, மதுக்கரை சரகத்தில் யானைகள் ரயில் பாதையை கடக்கும் போது ஏற்படும் ரயில் விபத்துகள். இது கவலைக்குரிய பிரச்னையாக உள்ளது.

மதுக்கரை வனச்சரகத்தில் சோழக்கரை சுற்று மற்றும் போலம்பட்டி பிளாக் 1 காப்புக்காடுகள் வழியாக 2 ரயில் பாதைகள் செல்கின்றன. துரதிர்ஷ்டவசமாக 2008ம் ஆண்டு முதல் இதுவரை ரயில்கள் மோதியதில் 11 யானைகள் இறந்துள்ளன. இதில் இளம் கன்றுகள் மற்றும் இளம் யானைகள் அடங்கும். எவ்வளவுதான் ரயில்வே மற்றும் வனத்துறை இணைந்து சுரங்கப்பாதைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுபோன்ற சம்பவங்களை குறைக்க முடியவில்லை என்பது வனத்துறையின் கவலையாகவே இருந்து வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு அமைப்பை நிறுவ ரூ.7.24 கோடியை தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. உலகின் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு கால் பதித்து விட்டது. அப்படித்தான் யானைகள் பாதுகாப்பிலும் அதன் முக்கியத்துவத்தை செலுத்தியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் ரயில் பாதையின் லைன் ஏ மற்றும் லைன் பி ஆகியவற்றில் 7.0 கி.மீ பாதையில் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இந்தப் பணிகள் பணிகள் தொடங்கப்பட்டது.

அதன்படி, கண்காணிப்பு அமைப்பில், வெப்ப (தெர்மல்) மற்றும் சாதாரண கேமராக்கள் பொருத்தப்பட்ட 12 உயரமான கோபுரங்கள், போலாம்பட்டி பிளாக்-1 வனப்பகுதியில் முக்கிய இடங்களில் யானைகள் கடக்கும் அனைத்து முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கி 150 மீ சுற்றளவில் விலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிய பாதையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.

உணரப்பட்ட தரவு தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படுகிறது. இது களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிகழ்நேர அடிப்படையில் தரவுகளை செயலாக்குகிறது. இதன்மூலம், வனத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, ரயில் ஓட்டுநர்களுக்கு அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் எச்சரிக்கைகள் மூலம் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, 2 தடங்களிலும் ஏதேனும் விலங்கு இருந்தால் ரயில் ஓட்டுநர்கள் முன்கூட்டியே பார்த்து செயல்பட ஒலிப்பெருக்கிகள் மற்றும் டிஜிட்டல் திரைகள் எச்சரிக்கைகளும் தடங்களில் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விபத்துகள் தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிப்ரவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலங்களில் மதுக்கரை தொடர்வண்டி பாதைகளில் 1106 யானைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு வாழ்விடங்களுக்கு யானைகள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி இடையே செய்வதற்காக, தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்கள் குறித்த அறிக்கைன சமர்ப்பிப்பதற்காக தமிழ்நாடு அரசு 2 குழுக்களையும் அமைத்துள்ளது.

* 3063 யானைகள்

2024 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,063 காட்டு யானைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். கோயம்புத்தூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள யானைகளை விட சத்தியமங்கலம் காடுகளில்தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன.

* சுரங்கப்பாதை

கடந்த ஏப்ரல் 2024ம் ஆண்டு ரயில்வே துறையால், பி ரயில் தண்டவாளத்தில் வனவிலங்குகளின் நடமாட்டத்திற்காக ஒரு சுரங்கப்பாதை கட்டப்பட்டது. தற்போது மொத்தமாக 6 சுரங்கப்பாதைகள் வனவிலங்குகளின் நடமாட்டத்திற்காக உள்ளன

* கோவை மதுக்கரை-பாலக்காடு ரயில்வே தண்டவாளத்தில் காட்டு யானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல தமிழ்நாடு வனத்துறையினர், ரயில்வே துறையில் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

* யானைகளின் இறப்பு விகிதம்

தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களில் யானைகளின் இறப்பு விகிதம் குறித்த ஆய்வுகளில், மொத்த யானை இறப்பில் யானைக்குட்டிகள்:

* இளவயது யானைகள் 45%

* 0-5 வயதுக்குட்பட்ட யானைகள் 23%

* இளம் யானைகளில் (16 முதல் 25 வயது வரை) இறப்பு விகிதம் 33% ஆக உள்ளது.இயற்கைக்கு மாறான மற்றும் தடுக்கக்கூடிய யானை இறப்புகள் தொடர்பான சிக்கல்களை புரிந்துகொள்வதற்கும் பொருத்தமான மேலாண்மை தலையீடுகளை பரிந்துரைப்பதற்கும் காடுகளில் யானைகளின் இறப்பு குறித்த விரிவான பகுப்பாய்வை நடத்துவதற்கும், தமிழ்நாடு அரசு, யானை இறப்பு கட்டமைப்பை தணிக்கை உருவாக்கியுள்ளது. இது நாட்டிலேயே முதல் முதலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.