Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செயற்கை கருத்தரிப்பு மூலம் தாய்மை; இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மரணம்: நடிகையின் வாழ்வில் சோகமும் மகிழ்ச்சியும்

பெங்களூரு: செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த கன்னட நடிகை பாவனா, பிரசவத்தின்போது ஒரு குழந்தையை இழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகையான பாவனா ராமண்ணா (40), செயற்கை கருத்தரிப்பு மற்றும் விந்தணு தானம் மூலம் இரட்டைக் குழந்தைகளுடன் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கடந்த ஜூலை 4ம் தேதி அறிவித்திருந்தார். தனது 20 மற்றும் 30 வயதுகளில் தாய்மையின் மீது நாட்டம் இல்லாத தனக்கு, 40 வயதில் அந்த ஆசை ஏற்பட்டதாகவும், திருமணமாகாத பெண் என்ற நிலையில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தன்னை அலைக்கழித்ததாகவும் அவர் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

தனது தந்தை, சகோதரர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது குழந்தைகளுக்குத் தந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு நிறைந்த வீட்டில் அவர்கள் வளர்வார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டதுடன், சமீபத்தில் தனது வளைகாப்புப் படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடிகை பாவனாவிற்குப் பிரசவம் நடந்துள்ளது. அதில் அவருக்கு இரட்டைக் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தின்போது ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. கர்ப்பத்தின் மூன்றாவது காலகட்டத்தில் பாவனாவிற்குச் சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், பரிசோதனையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எட்டாவது மாதத்திலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, தாயும், உயிர் பிழைத்த பெண் குழந்தையும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.