*போட்டிகளில் அசத்திய மாணவ, மாணவிகள்
திருவாரூர் : திருவாரூரில் ஒன்றிய அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று முதல் துவங்கியுள்ளன.
2022-&23ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மூலம் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும்விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் வட்டார அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது.
இந்த போட்டிகள் கடந்த 2022ம் ஆண்டு துவங்கிய நிலையில் முதலாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட இந்த போட்டியானது கடந்தாண்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
மாநில அளவில் முதலிடத்தை பிடித்த மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி என்ற பட்டங்கள் வழங்கப்பட்டதுடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 4வது ஆண்டாக நடப்பாண்டிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழாபோட்டிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 945 அரசு பள்ளிகள் மற்றும் 125 அரசு உதவி பெறும் பள்ளி என மொத்தம் ஆயிரத்து 70 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வட்டார அளவில் நேற்று முதல் துவங்கியது.
இதனையொட்டி ஒன்று முதல் 5 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்காக திருவாரூர் ஐநூற்றுபிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் நகராட்சி பள்ளியில் இந்த கலைதிருவிழாவானது நடைபெற்றது.
இதனை வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன் மற்றும் சுமதி ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் வட்டாரம் முழுவதும் இருந்து வரும் 99 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரேவதி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தி மற்றும் கலைசெல்வன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு பள்ளி ஆகிய பள்ளிகளிலும் இந்த கலைதிருவிழாவானது நடைபெற்ற நிலையில் இன்று மற்றும் நாளையுடன் இந்த வட்டார அளவிலான கலைபோட்டியானது நடைபெற்று மாவட்ட அளவில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.