சென்னை: மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் அமலாகியுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் வரப்பட்டது. உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராயம், சைபர் க்ரைம், மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே முன்பு தடுப்புக் காவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2025-26ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதனால் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இனி தடுப்பு காவல் (குண்டாஸ்) விதிக்கும் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. அத்தகைய நபரின் சொத்தை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி, விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த ஜூன் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து இந்த சட்ட திருத்தம் கடந்த 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.