நெல்லை: நெல்லை அருகே பேட்டையில் கந்து வட்டி கேட்டு மிரட்டி இளம்பெண்ணையும், அவரது தம்பியையும் காரில் கடத்திய நிதி நிறுவனர், அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் பழனி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பார்வதி (32). இவர் டவுனில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் மகன் வானுமாமலையிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு வார வட்டியாக ரூ.10 ஆயிரம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக வட்டியை சரிவர செலுத்தாததால் வானுமாமலை, பார்வதியிடம் வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுத்தமல்லி விலக்கு நிவாஸ் நகர் அருகே பார்வதி, தனது தம்பியுடன் பழைய கார்கள் வாங்கி விற்கும் நிறுவனத்தில் கார் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையறிந்த வானுமாமலை உள்ளிட்டோர் அந்த கார் நிறுவனத்திற்கு சென்று பார்வதியிடம் கடனை திருப்பி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். மேலும் பார்வதி மற்றும் அவரது தம்பியை நாங்குநேரி அருகே உள்ள தோட்டத்திற்கு காரில் கடத்தி சென்றனர். பின்னர் யாரையாவது பணம் கொண்டு வரச்சொல் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பார்வதியின் தம்பி, அவரது மாமாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் பதறிய அவர் தனது வீட்டின் சாவி மற்றும் சொத்து பத்திரத்தை உடனடியாக நிதி நிறுவனத்திற்கு கொண்டு தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து வானுமாமலை தரப்பினர், அவர்களை மீண்டும் நெல்லைக்கு கொண்டு வந்துவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து பார்வதி, பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வானுமாமலை, அவரது கார் டிரைவர் செல்வின் என்ற அப்துல்(26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். கைதான வானுமாமலை ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.