Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு வயது 58. தனது இசையால் உலகைத் தனது கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவருக்கு, முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் தனது இசையால் மிகப்பெரிய கட்டமைப்பைக் கட்டியவர்.

அவருக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போதும் வெவ்வேறு மொழி படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளார். தற்போது, அவரது இசையில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.