Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அற்புதாபுரம் பகுதியில் செண்டி பூ சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

*நடவு செய்த 60ம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும்

தஞ்சாவூர் : தஞ்சை அடுத்த அற்புதாபுரம் பகுதியில் செண்டி பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் செண்டி பூ விளைச்சல் அமோகமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், திருக்கனூர்பட்டி, அற்புதாபுரம் பகுதியில் செண்டு பூ அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து கன்றுகள் வரவழைக்கபட்டு இங்கு விவசாயம் செய்யபடுகிறது. இங்கு 1 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு தற்போது அதிக அளவில் பூக்கள் பூத்து இருக்கின்றன.

முதலில் பயிரிடப்படும் கன்றுகள் 60 முதல் 70 நாட்களில் பூக்கள் பூக்கின்றன. பின்பு அந்த பூக்கள் அனைத்தும் அதிகாலையில் பறிக்கப்பட்டு தஞ்சாவூர் பூ சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரணியம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, வருட பிறப்பு, ரமஜான், கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ நாட்களில் அதிக விலைக்கு விற்பனை ஆகிறது.

இது குறித்து ஜெண்டிப்பூ விவசாயி கூறுகையில், எனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சென்டி பூ சாகுபடி செய்து உள்ளேன். அதில் நிலத்தை தயார் செய்யும் முதல் செடியில் பூப்பூக்கும் வரை அதற்கான முதலீடு செலவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. செண்டி பூ அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.

அதுவும் எல்லா காலகட்டத்திலும் சாகுபடி செய்யலாம். உரமான தொழு உரத்தை இடலாம். செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்து உரத்தினை இட்டு, செடிகளின் வேர் பகுதியில் மண் அணைக்க வேண்டும். செண்டுமல்லி சாகுபடியில் நடவு செய்த 30, 60ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். செண்டு சாகுபடி பொறுத்தவரை களையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு வேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

30 நாட்களில் செடிகளின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும். இந்த முறைகளை கடைபிடித்தால் நடவு செய்த 60ம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம்.

ஆனால் இதில் வரும் வருமானமோ முகூர்த்த நாளாக இருந்தால் ஒரு கிலோ பூ ரூ.30 லிருந்து ரூ. 40 வரை போகிறது. இல்லை என்றால் ரூ.15 லிருந்து 20 ரூபாய் மட்டுமே மார்க்கெட்டில் விலை போகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தால் எங்களுக்கு லாபம் வருகிறது. இல்லை என்றால் நஷ்டம் தான் ஏற்படுவதாக கூறினார்.