Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம் முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்: காவடி எடுத்து, மொட்டை அடித்து பக்தர்கள் வழிபாடு

காஞ்சிபுரம்: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் முருகன் திருத்தலங்களில் புகழ் பெற்றதாகும். நேற்று இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பரணி அன்று மாலை முதற்கொண்டே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரத் தொடங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிருத்திகை தின தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக வந்து கோயிலை ஒட்டியுள்ள சரவண பொய்கையில் நீராடி மொட்டை அடித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் எளிதில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* குன்றத்தூர் கோயில் :

குன்றத்தூர் முருகன் கோயிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தங்க கவசம் சாத்தி ஆராதனைகளும் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி என்று பல வகையான காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் 100 ரூபாய், 50 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு வரிசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோயில் அறங்காவலர் குழு சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் சுமார் 25,000 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக நேற்று இரவு 11 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் மேற்கொண்டனர். குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

* காஞ்சி குமரக்கோட்டம் கோயில் :

காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில், உற்சவர் முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

தொடர்ந்து, இரவு கோயில் உட்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சமேதராக உற்சவர் முத்துக்குமாரசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பன்னீர் காவடி, பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து குமரகோட்டம் முருகபெருமானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், தலைமை சிவாச்சாரியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

* வல்லக்கோட்டை கோயில் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வருகை தந்தனர். நேற்று முன்தினம் ஆடி பரணியினை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இரவு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

நேற்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் வள்ளி - தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியருளினார். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ரத்தினாங்கி சேவையில் மயில் மீது அருள்பாலித்தார். ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வந்து ‘‘அரோகரா அரோகரா” என்ற கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.

காலை 11 மணிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து வந்து, வல்லக்கோட்டை சிவன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு மாட வீதி, சன்னதி தெரு வழியாக கோயிலை அடைந்தனர். அப்போது புஷ்ப காவடி, பால் காவடி ஆகியவைகளை சுமந்து பச்சையாடை அணிந்து விரதமிருந்து அரோகரா, வெற்றிவேல் கோஷத்துடன் வந்து முருகப்பெருமானை வணங்கினர்

* தர்மசாஸ்தா கோயில் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி ஐயப்பன், செல்வ விநாயகர், செல்வ முருகன், ஆஞ்சநேயர் என தனிதனியே சன்னதிகள் உள்ளன. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இக்கோயிலில் அருள் பாலிக்கும் செல்வ முருகனுக்கு, ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக, ஸ்ரீ ராமானுஜர் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள் தலையில் பால் குடங்களை சுமந்து, ஊர்வலமாக எடுத்து வந்து செல்வமுருகனுக்கு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து, ஸ்ரீ செல்வ முருகனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யபட்டது. இதில், ஸ்ரீபெரும்புதூர் வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.