ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை கருத்து; உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடெல்லி: இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, இது போன்ற கருத்துகளை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் சமூக வலைதளங்களில் ஏன் பதிவிடுகிறீர்கள் என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ‘இந்தியா ஒற்றுமை’ நடைப்பயணத்தின் போது, ‘அருணாச்சலப் பிரதேசத்தில் சீன வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களைத் தாக்குகின்றனர்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்து இந்திய ராணுவத்தைக் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ராணுவத்தில் கர்னல் பதவிக்கு இணையான பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் சார்பில் வழக்கறிஞர் விவேக் திவாரி, லக்னோ நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ‘பேச்சுரிமை என்பது இந்திய ராணுவத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பேசுவதை உள்ளடக்காது. இந்த விவகாரத்தில் புகார்தாரர் ராணுவத்தின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டவர் என்பதால், அவரையும் பாதிக்கப்பட்டவராகவே கருத வேண்டும்’ எனக் கூறி லக்னோ நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இதுபோன்ற முக்கியமான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் சமூக வலைதளங்களில் ஏன் பதிவிட வேண்டும்? இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கையகப்படுத்தியது உங்களுக்கு (ராகுல் காந்தி) எப்படித் தெரியும்? அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? உண்மையான இந்தியர் யாரும் இப்படிப் பேச மாட்டார்கள். பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதையும் பேசிவிட முடியாது’ என்று நீதிபதிகள் ராகுல் காந்தி தரப்புக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் மேல் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.