பதுங்கு குழியில் புகுந்து ராணுவம் தாக்குதல் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்
பெஷாவர்: பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில், 17 தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரின் செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த தீவிரவாத அமைப்பை ஒடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேரா இஸ்மாயில் கான் பகுதியில் நடத்தப்பட்ட உளவு அடிப்படையிலான தாக்குதலில் 13 டி.டி.பி. தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்றில் நேற்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்தத் தாக்குதலில் 17 தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பிராந்திய காவல்துறைத் தலைவர் ஷெபாஸ் இலாஹி கூறுகையில், ‘இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்’ என்று உறுதிப்படுத்தினார். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளை ‘க்வாரிஜ்’ என்றழைக்கப்படும் பிரிவினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.