சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கவும், கொலைக்காக வழங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேரில் வந்து வெட்டியவர்கள், ரூட் எடுத்து கொடுத்தவர்கள், பண உதவி செய்தவர்கள், கொலை திட்டத்திற்கு உடந்தையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதானவர்களின் சொத்து விவரங்கள், பண பரிவர்த்தனைகள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 5 மாதத்தில் அவர்களுக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, எங்காவது சொத்து வாங்கி வைத்து உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கூலிப்படையாக செயல்படும் நபர்களின் சொத்துகளை முடக்கினால் ரவுடியிசம் குறையும் என போலீசார் கருதுகின்றனர். எனவே, தற்போது சிக்கியுள்ள 21 பேரின் சொத்து விவரங்களை கண்காணித்து, அவற்றை முடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கைதான முகிலன், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், பிரபல ரவுடி சம்பவ செந்திலின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. மேலும், ராஜேஷ் மீது 2018ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து ராஜேஷ், சம்பவ செந்தில், சீசிங் ராஜா மற்றும் டெல்லி வழியாக வெளிநாட்டிற்கு தப்பிய வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் கிருஷ்ணகுமார் வழக்கறிஞர் என்பதும், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹரிஹரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒவ்வொருவராக அடுத்தடுத்து சிக்கிய நிலையில், கிருஷ்ணகுமார் தனது கார் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று, அங்கு சிவாவிடம் காரை கொடுத்து, சென்னைக்கு அனுப்பியுள்ளார். பின்னர், மதுரைக்கு தனது மனைவியை வரவழைத்து, அங்கிருந்து டெல்லிக்கு சென்று, டெல்லியில் இருந்து தாய்லாந்து தப்பி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது காரை சென்னைக்கு கொண்டு வந்தபோது, சிவா போலீசாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். சைபர் க்ரைம் போலீசாரும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இந்த கொலை சம்பந்தமாக யார் யாருக்கு அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வருகின்றன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலிப்படையாக செயல்படும் நபர்களின் சொத்துகளை முடக்கினால் ரவுடியிசம் குறையும் என போலீசார் கருதுகின்றனர்.