Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்: வக்கீல் ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை.! சம்பவ செந்தில் தொடர்பு குறித்து கிடுக்கிப்பிடி

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக வக்கீல் ஹரிஹரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரபல ரவுடி சம்பவ செந்திலுடன் உள்ள தொடர்பு, தற்போது அவர் எங்கு உள்ளார் என்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று வக்கீல் ஹரி ஹரன், பொன்னை பாலு, ராமு மற்றும் அருள் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஹரிகரனிடம் தொடர்ந்து 5 நாட்களும் மற்ற 3 பேரிடம் கடந்த 3 நாட்களும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து ஹரிகரணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி சம்பவ செந்திலுக்கும் அவருக்கும் உள்ள 10 ஆண்டுகள் நட்பு குறித்து விசாரணை செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, யார், யாருக்கு பணம் கொடுத்தார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். மேலும் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து விபிஎன், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கால் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சம்பவ செந்தில் ஹரிஹரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் சம்பவ செந்தில் எங்கு தங்குவார் என்பது குறித்தும் அவர் நேபாளத்துக்கு அடிக்கடி சென்று வந்ததற்கான விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ செந்திலுக்கு பக்கப்பலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, ராமு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் வெளியாகும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.