Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரின் அதிரடியால் பலரும் கலக்கத்தில் உள்ளனர். வழக்கமாக ஒரு கொலை சம்பவம் நடந்தால் அந்த கொலையை செய்தவர்கள் நீதிமன்றத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ சரணடைந்து விடுவார்கள். அதன் பிறகு அந்த கொலையை பற்றி பெரிய அளவிற்கு பேச்சு இருக்காது.

ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் நடந்த அன்றே 8 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் மேலும் 3 பேர் பிடிக்கப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க அவரது தம்பி பொன்னை பாலு, ரவுடிகள் திருவேங்கடம், திருமலை உள்ளிட்டோர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், இதற்கு வழக்கறிஞர் அருள் மூளையாக இருந்தார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இத்துடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்னை மாநகர கமிஷனர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 11 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வழக்கு முழுவதுமாக விசாரணை செய்யப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கில் யார் யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள், யார் இதற்கு மூளையாக செயல்பட்டார் என்ற கோணத்தில் முழு வழக்கு விசாரணையும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் என ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

முதலில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி தப்பித்து ஓடும்போது போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்ற நபர்களிடம் விசாரணை செய்ததில் அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சதீஷ்குமார் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரும் மனு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரவுடிகளுக்கும், கூலிப்படைக்கும் தரகராக செயல்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனையும் காவலில் எடுக்க தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்னை பாலு உள்ளிட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், மீண்டும் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.