ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 4 பேர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அஸ்வத்தாமன் உள்பட 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ள பிரபல தாதா நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் முன்னாள் மாநில நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் மீது தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அவர் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவா, கே.ஹரிதரன், கே.ஹரிகரன் ஆகியோரும் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தகராறில் ஈடுபட்டு எழும்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கொடுங்கையூரை சேர்ந்த செந்தில்நாதன், சி.சக்திவேல், அயனாவரத்தை சேர்ந்த ஜி.விஜயகுமார், ராயபுரத்தை சேர்ந்த டி.விமல், கொடுங்கையூரை சேர்ந்த வி.தினேஷ்குமார் ஆகியோரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பி.கோவிந்தராஜன், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த கே.மணியரசன் ஆகியோரும் தொழில் செய்ய தடை விதித்து பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. ஆக இந்த 11 வழக்கறிஞர்களும் அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அவர்கள் மீதான வழக்கு முடியும்வரை தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.