ஆம்ஸ்ட்ராங் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்பு: வரும் 10ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த விகாரம் தொடர்பாக தற்போது வரை 27 பேர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில்,\\” ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணைகளும் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி,\\” வழக்கை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக உத்தரவிட்டார்.