ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவரது மனைவி பொற்கொடிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவரது மனைவி பொற்கொடிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேரை கைது செய்துள்ளளர். மேலும் இரண்டு பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என கூறி, ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிக் கடந்த 24-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஏற்கனேவே இடைக்காலத் தடை கோரியும், அந்த உத்தரவை ரத்துச் செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 10ஆம் தேதி விசாரித்தது. இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன் குறிப்பாக அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து அந்த உத்தரவுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து.
இதனிடையே இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு நபர்களுக்கு விசாரணை நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கி இருக்கக்கூடிய சூழலில் இந்த வழக்கில் விரைவில் நீதி வழங்க கோரியும் மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க தடை விதிக்க கோரியும் இடையீட்டு மனுவை தாக்கல் செய்வதுக்கு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக மூத்த வழக்கறிஞருடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்திய பிறகு இது தொடர்பாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றம் ஜெ.கே.மகேஸ்வரி தலைமையிலான அமரவுவில் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி அளித்துள்ளது. விரைவில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளன.