டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா காவல்துறையினர் விசாரணை சரியான கோணத்தில் இல்லை. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும் அந்த ஆவணங்களை காவல்துறை இதுவரை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்று நீதிபதியிடம் குற்றம்சாட்டினர். இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்த போது கடந்த முறை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிபிஐ விசாரணையை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணையின் போதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது என்ற கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரையில் விசாரணை தற்போது நடைபெற்று குற்றப்பத்திரிகையும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் ஜாமின் பெற்று வருகிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையே வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் தரப்பை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் சிபிஐ விசாரணைக்கு ஆவணங்களை இதுவரை தமிழக காவல்துறையினர் ஒப்படைக்கவில்லை என்று மீண்டும் குறுக்கிட்டார்கள். ஆனால் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று அனைத்து வழக்குகளிலும் சேர்க்கக்கூடாது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது சரியில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து ஆணையிட்டனர்.
சில நேரங்களில் விரிவான ஆய்வு செய்த பின்பு தான் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் அந்த வகையில் இந்த நீதிமன்றம் தற்போது விரிவான ஆய்வு செய்த பின்பு இந்த இடைக்கால தடையை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த ஆணைக்கு தற்போது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கை தமிழக காவல்துறை மீண்டும் விசாரிப்பார்கள்.


