சென்னை: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணை முடிந்து தற்போது வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது; ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் 6 மாதங்களில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அரசியல், ஊடகம் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். இதுவரை விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் ஆவணங்களை, சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.