ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்ததை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அது தொடர்பாக மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், எப்போது உத்தரவுக்கு அனுமதி பெறப்பட்டது. மனுதாரர்களுக்கு எப்போது குண்டர் சட்ட உத்தரவு மற்றும் ஆவணங்கள் தரப்பட்டது என்று சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.