Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ரூ. 7.25 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

மாமன்னன் இராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடம் 23.07.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி இராஜேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். இராஜேந்திர சோழ மன்னர் ஆட்சிகாலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) இராஜேந்திர சோழன் உருவாக்கினார் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம். மாமன்னன் இராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூர்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள். கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.