அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிதிலவாடி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து உஞ்சினி கிராமத்திற்கு செல்வதற்காக அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்தார்.
வடக்குப்பட்டி கல்லுக்குட்டை என்ற இடத்தில் கார் செல்லும் போது தனது பெற்றோருடன் நின்றிருந்த 11வயது சிறுமி கைகாட்டி அமைச்சர் காரை நிறுத்தினார். இதனை பார்த்த அமைச்சர், காரிலிருந்து இறங்கி வந்து சிறுமியிடம் உனது பெயர் என கேட்டதோடு, உனது தைரியத்திற்கு பாராட்டு என தெரிவித்தார். அப்போது சிறுமி, தனது பெயர் அர்ச்சனா என்றும், 6ம் வகுப்பு படித்து வருவதாகவும், வடக்குப்பட்டி கல்லுக்குட்டை கிராமம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறுமி, தங்களது தெருவில் 50 வீடுகள் உள்ளது. சாலை மட்டத்திலிருந்து தெரு தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் தன்னால் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருப்பதாக கூறி கோரிக்கை அடங்கிய மனுவை அமைச்சரிடம் கொடுத்தார்.
இதனையடுத்து வடக்குப்பட்டி கல்லுக்குட்டையில் உள்ள தெருவை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர், உடனடியாக அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தனது காரை தைரியமாக கைகாட்டி நிறுத்தி கோரிக்கை விடுத்த சிறுமி அர்ச்சனாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.