Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் அருகே பயங்கரம் நாய் குறுக்கிட்டதால் லாரி கவிழ்ந்து 80 சிலிண்டர்கள் வெடித்து சிதறல்: எரிந்தபடி ரோட்டில் உருண்டு ஓடியதால் மக்கள் அலறல்

அரியலூர்: அரியலூர் அருகே நேற்று காலை காஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில், சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதில், லாரி எரிந்து நாசமானது. ரோட்டில் சிலிண்டர்கள் எரிந்தபடி உருண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (35). லாரி டிரைவரான இவர், அரியலூரில் உள்ள டீலருக்காக இனாம்குளத்தூர் குடோனில் இருந்து லாரியில் காஸ் நிரப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களுடன் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டார்.

வழியில் கல்லகம் டோல்பிளாசா அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். விடிந்ததும் நேற்று அதிகாலை புறப்பட்டு, அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் பிள்ளையார் கோயில் அருகே காலை 7.15 மணியளவில் வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததும் அதில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் விழுந்து எரிந்தபடி உருண்டு ஓடியது. 80க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் லாரியிலும், சாலையிலும் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

சிலிண்டர்கள் வெடித்த போது வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். இந்த விபத்தில் கனகராஜ் காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து முதலில் வெடிக்காத சிலிண்டர்களை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்து, 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் தரையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அந்த பகுதியில் திருமானூரில் இருந்து அரியலூருக்கு செல்லும் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் மேலே எழும்பியதால் லாரியின் அருகில் கிடந்த சிலிண்டர்களை அந்த தண்ணீர் குளிர்வித்தது.

தகவலறிந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால் திடீரென டிரைவர் பிரேக் போட்டதும், இதனால் நிலை தடுமாறிய லாரி தலைக்குப்புற கவிழ்ந்தததால் சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடிக்க தொடங்கியதும் தெரிய வந்தது.