*நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
ஆற்காடு : ஆற்காட்டில் நடந்து வரும் ரூ.12.94 கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.9.46 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்துவருகிறது. மேலும் கடைகள் கட்டப்பட்டு தற்போது நுழைவாயில் கட்டும் பணி நடந்துவருகிறது.
இப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி அங்காடி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆற்காடு பாலாறு செய்யாறு பைபாஸ் சாலை முதியோர் இல்லம் அருகே 2 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேமிப்பு கிணறு அமைக்கும் பணி, தாஜ்புரா ஏரிக்கு ஆற்காடு வழியாக செல்லும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமுக நகர செயலாளர் ஏ.வி.சரவணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் நாராயணன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வேலவன், தாசில்தார் மகாலட்சுமி, பொறியாளர் பரமுராசு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.