Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆற்காடு அருகே 4 ஆண்டுகளுக்கு பிறகு நந்தியாலம் ஏரி நிரம்பி கோடி போனது

*உபரி நீரில் மீன்பிடித்த பொதுமக்கள்

ஆற்காடு : ஆற்காடு அருகே நந்தியாலம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரி நீர் வெளியேறி கோடி போனது. ஏரியில் இருந்து வெளியேறிய மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3699 ஏரிகள் உள்ளன.

இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகள் உள்ளன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் 144 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது.

மேலும் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 35 ஏரிகளிலும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 51 ஏரிகளிலும், 26சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 121 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கு கீழ் 18 ஏரிகளிலும் நீர் உள்ளது. அதேபோல் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த தொடர் மழையால் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள நந்தியாலம் ஏரி நேற்று காலை முழு கொள்ளளவை எட்டி கோடி போனது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரில் விரால், ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் வெளியேறியது. அந்த மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.

கடந்த 2021ல் பெய்த தொடர் கனமழை காரணமாக நந்தியாலம் ஏரி நிரம்பி கோடி போனது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. இதனால் நந்தியாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பதாலும், குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்பதாலும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.