Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றினை அனைவரும் அறிந்துகொள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய வரலாற்று ஆவணங்களை மாதம் ரூ.50,000 உதவித் தொகையுடன் ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

பழமைமிகு நமது தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

1633ஆம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670ஆம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்ற முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்பட்டும், 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றினை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ. 50,000 ஆராய்ச்சி உதவித் தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இன்று (17.11.2025) முதல் பெறப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் www.tamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் 28.11.2025 வரை விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே பெறப்படும். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.