Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரம எதிரி பாகிஸ்தானுடன் இந்தியா நாளை மோதல்: துபாயில் அனல் பறக்கும் ஆட்டம்

துபாய்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. அதன்படி நாளை துபாயில் நடைபெறும் 5வது லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுவதில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில் நாளையும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம். ஆனால் வங்கதேசத்திடம் போராடி தான் வெற்றி பெற முடிந்தது. பேட்டிங்கில் சுப்மன் கில் முதுகெலும்பாக உள்ளார். அவர் கடைசி 4 போட்டியிலும் 2 சதம், 2 அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார்.

ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. விராட் கோஹ்லி இன்னும் 15 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் இலக்கை தொடுவார். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர்படேல், ஜடேஜா இருப்பது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்துகிறது. வங்கதேசத்துடன் வேகத்தில் ஷமி 5 விக்கெட் வீழ்த்தியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹர்சித் ரானாவும் தனது பங்கிற்கு 3 விக்கெட் எடுத்தார். இதனால் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வங்கதேசத்துடன் ஒரு விக்கெட்டும் எடுக்காத குல்தீப் யாதவுக்கு பதில் நாளை வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மறுபுறம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் இந்த போட்டியிலும் தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். இதனால் வாழ்வா, சாவா நெருக்கடியில் களம் காண்கிறது. பகார் ஜமான் காயத்தால் விலகிய நிலையில், இமாம்-உல்-ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். பாபர் அசாம், சல்மான் ஆகா குஷ்தில் ஷா ஆகியோர் ரன் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேகத்தில் ஷாகின் ஷா அப்ரிடி, நதீம் ஷா, ஹாரிஸ் ரவூப் வேகத்தில் மிரட்டினாலும் ரன்களை வாரி வழங்குகின்றனர். தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும் குறை தான். பீல்டிங்கும் படுமோசமாக உள்ளது. வலுவான இந்தியாவை வீழ்த்தவேண்டுமெனில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும். நாளை மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.

எங்களுக்கு நெருக்கடி இல்லை

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஷ் ரவூப் கூறுகையில், ``எங்களுக்கு கொஞ்சம் கூட நெருக்கடி கிடையாது. அனைவரும் ரிலாக்ஸ் ஆக இருக்கின்றோம். மற்ற போட்டியை போல் தான் இந்தியாவை எதிர்கொள்வோம். அனைத்து வீரர்களும் பாசிட்டிவாக உள்ளனர். எங்கள் அதிகபட்ச செயல் திறனை வெளிப்படுத்துவோம். துபாயில் டி.20 போட்டியில் இந்தியாவை 2 முறை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறோம். அதேபோல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம். வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையில் உள்ளனர். எனவே இந்த போட்டி நல்லபடியாக அமையும். பாகிஸ்தான் அணிக்கு துபாயில் நல்ல ரெகார்ட் இருக்கிறது’’ என்றார்.