ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடந்த பிரம்மோற்சவ தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து, வழிபட்டனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 26ம் தேதி இரவு கிராமசாந்தி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 27ம் தேதி கோயில் வளாகத்தில் கொடிமரத்தில் விழா கொடியேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாள் இரவும் அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனம் போன்றவற்றில் பெருமாள் எழுந்தருளி, வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
இதில், நேற்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவமும், இதையடுத்து மலர் பல்லக்கில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கஸ்தூரி அரங்கநாதர் எழுந்தருளினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் துவங்கியதும், பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பரவச கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர்.
தேர், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சென்று, பெரியமாரியம்மன் கோயில் அருகே பக்தர்களின் வழிபாட்டிற்காக நிலை நிறுத்தப்பட்டது. பின்னர், மாலையில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு காமராஜர் வீதி வழியே கோயிலில் நிலை வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் பாதைகளில் மின் நிறுத்தமும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. பெரியமாரியம்மன் கோயில் அருகே தேரோட்டத்திற்கு இடையூறாக இருந்த வழிகாட்டி பெயர் பலகையும் அகற்றப்பட்டிருந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானமும், கோயிலில் லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (4ம் தேதி) காலை பெருமாள் குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்ல உள்ளார்.
5ம் தேதி மாலை 6 மணிக்கு கோயில் தெப்பகுளத்தில் தெப்ப உற்சவமும், 6ம் தேதி காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனமும், அன்று இரவு 6.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற உள்ளது.