ஏரல்: ஏரல் அருகே முருங்கை மரத்து தோட்டத்து வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன்வலை வேலியில் சிக்கி பரிதவித்த மானை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே வல்லநாடு மலைப்பகுதியில் அதிக அளவில் வசித்து வரும் மான்கள், கோடை காலத்தில் குடிநீர் மற்றும் உணவு தேடி மலையை விட்டு இறங்கி அருகேயுள்ள ஊருக்குள் வருவது வழக்கம்.
இவ்வாறு வரும் மான்களை தெருநாய்கள் துரத்துவதால் மலைப்பகுதிக்கு திரும்ப முடியாத மான்கள், இங்குள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளில் தங்கிவிடுவது தொடர் கதையாக உள்ளது. அந்தவகையில் புதுக்கோட்டை, சாயர்புரம் பகுதி தோட்டங்களில் மான்கள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கடந்த ஆக.24ம்தேதி சாயர்புரம் அருகேயுள்ள தங்கம்மாள்புரம் தோட்டத்தில் மர்மமான முறையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
இதையடுத்து ஏரல் அருகேயுள்ள மொட்டத்தாதன்விளையில் திமுக கிளைச் செயலாளர் சிவலிங்கம் என்பவரது முருங்கை மரம் தோட்டத்தில் ஆடு, மாடுகள் புகுவதை தடுக்கும்பொருட்டு கம்புகளை நட்டியதோடு அதில் மீன்பிடிக்கும் வலைகளை அமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து தப்பிவந்த வந்த மான் ஒன்று, இங்குள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன்பிடிக்கும் வலையில் எதிர்பாராதவிதமாக சிக்கியதோடு தப்பிச்செல்ல முடியாமல் பரிதவித்தது.
இதைப் பார்த்து பதறிய சிவலிங்கம் ஏரல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், வலையில் சிக்கிய மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘‘இப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றி திரிவதாகவும், அதனை வனத்துறையினர் பிடித்து மீண்டும் மலைப் பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வல்லநாடு மலைப் பகுதியில் இருந்து வரும் மான்கள் ஊருக்குள் வராத வண்ணம் மலை அடிவாரத்தில் தடுப்பு வேலிகள் அமைத்து அதனை பாதுகாத்திட வேண்டும்’’ என்றனர்.