ஷார்ஜா: உலகப் பொதுமறை திருக்குறளை அரபியில் மொழியாக்கம் செய்துள்ளார் சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவர் பேராசிரியர் ஏ.ஜாகிர் ஹுசைன். இதன் வெளியீடு ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. ஷார்ஜா காவல்துறை அதிகாரி செல்வி சுமையா அலி முஹைன் ஹசன் அல் ஹாஷ்மி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். அமீரக பிரமுகர் அப்துல்லா அலீ ராஷித் முஹம்மது அல் யமாஹி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
அமீரக நாவலாசிரியர்கள் அஸ்மா அல் ஸர்வூனி, பத்ஹியா அல் நிம்ர்,ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் டாக்டர் பி எஸ் எம் ஹபிபுல்லா, பொதுச்செயலாளர் திரு. ஹமீத் யாசீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஆர் ஜெ சாரா தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் ஜாகிர் ஹுசைன் கூறும்போது, ‘‘அரபு பேசும் மக்களிடையே திருக்குறள் மொழி பெயர்ப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருக்குறளை அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.
