தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து முறையீடு; மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு
சென்னை: தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, அவர் டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீடு செய்தவர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் நடராஜ் ஆஜராகி, தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம். இது சம்பந்தமாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.