நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் கிராமபுறங்களில் 5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையங்கள், நகர் புறங்களில் 1000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கிவருகிறது. 2025-ம் ஆண்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப 642 துணை சுகாதார நிலையங்கள் கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமபுறங்களில் 9,330 துணை சுகாதார நிலையங்களும், நகர்ப்புறங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 2,368 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கிரப்புற துணை சுகாதார நிலையங்களை பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற வழக்கில் தடை ஆணை காரணமாக துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. முக்கியதுவம் வாய்ந்த செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உச்சநீதிமன்ற வழக்கில் இருந்த வழக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விரைவுபடுத்தப்பட்டு அவர்களுக்கு பணி வழங்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
அதன் அடிப்படையில் 1,231 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது மட்டுமில்லாமல் மீதம் இருக்க கூடிய 2,417 காலிபணியிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை நடைபெற்றுவருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.