Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 1ம் தேதி கடைசி நாள்

சென்னை: காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அடுத்த மாதம் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள மொத்தம் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளன.

வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை (ம) இன சுழற்சி விவரம் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். இந்த பணிக்கான விண்ணப்பத்தை chennai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அடுத்த மாதம் 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான காலிப்பணியிட விவரம், கல்வித்தகுதி, இதர தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த விவரங்களை chennai.nic.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். கல்வி தகுதியாக தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ். தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி, இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது.  பணி நியமனத்திற்கு விண்ணப்பதாரருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் தகுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

விண்ணப்பதாரர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடையவர்கள் சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.