சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் 42வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியதாவது: 1983ம் ஆண்டில் அப்போலோ மருத்துவமனை இந்தியாவின் முதல் பெருநிறுவன (கார்ப்பரேட்) மருத்துவமனையை தொடங்கியது. நாற்பது ஆண்டுகளில் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் 27,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்துள்ளது. மேலும் 11 லட்சத்திற்கும் அதிகமான நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
தெற்காசியாவின் முதல் புரோட்டான் புற்றுநோய் மையம், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான துல்லிய புற்றுநோயியல் மையம், இப்பிராந்தியத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட முதல் சைபர்நைஃப் ரோபோடிக் ரேடியோ அறுவை சிகிச்சை அமைப்பு போன்ற முன்னோடித்துவமிக்க, முதன்மையான திட்டங்களை முன்னெடுத்திருப்பதன் மூலம் இந்தியாவில் மட்டுமில்லாமல் அதற்கு அப்பாலும், அப்போலோ தொடர்ந்து மருத்துவ துறையின் அடையாளத்தை மாற்றியமைத்திருக்கிறது.
அப்போலோ ரோபோ உதவியுடன் சிகிச்சை அளிக்கும் 28 மேம்பட்ட ரோபோட்டிக் ப்ளாட்ஃபார்ம்கள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இதய ஆபத்து கணிப்பு, ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடனான அறுவை சிகிச்சை முறைகள் ஆகியவற்றின் மூலம் நவீன சிகிச்சைகளில் முன்னணியில் உள்ளது. 4 கோடி இந்தியர்கள் ‘அப்போலோ 24/7 டிஜிட்டல் ஹெல்த்’ மூலம் பலன் அடைந்திருக்கின்றனர். இந்த மேம்பட்ட சிகிச்சைகள், எதிர்கால நவீன மருத்துவத்தை இன்றே எல்லோருக்கும் கிடைக்கச் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.