சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன தொழில்நுட்ப கேத் லேப் தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்த உயர் தெளிவுத்திறன் கொண்ட 3டி இமேஜிங், மேம்பட்ட ஸ்டென்ட் மோஷன் காட்சிப்படுத்தல், விரிவான பாதுகாப்பு அம்சங்களுடனான நரம்பு பாதுகாப்பு மற்றும் குறைந்த அளவிலான கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை அடங்கிய கேத் லேப் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து வைத்தார்.
இந்த கேத் லேப் என்பது சிறப்பு சிகிச்சைகளுக்கான ஒரு பிரத்யேக அறையாகும். இங்கு மிகவும் சிக்கலான, உயிர்காக்கும் மருத்துவ நடைமுறைகளை, உடலில் குறிப்பிட்ட பகுதியை கீறி மேற்கொள்ளும் திறந்த அறுவை சிகிச்சையின் தேவையில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இதயம், நரம்பு மற்றும் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளில் மருத்துவர்கள் மிகத் துரிதமாகவும், மிகத் துல்லியமாகவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
அதிநவீன கேத் லேப் தொழில்நுட்பத்திலான இந்த அவசர சிகிச்சைப் பிரிவை தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் அண்ட் இன்டர்நேஷனல் பிரிவின் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி கூறியதாவது:மிகவும் மேம்பட்ட கேத் லேப் தொடங்கப்பட்டிருப்பது, அதிநவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான, மிகத் துல்லியமான மருத்துவ பராமரிப்பை முன்னெடுக்கும் அப்போலோவின் பயணத்தில் மற்றொரு மைல்கல்.
இந்த நவீன வசதி மருத்துவர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்குகிறது. அவர்கள் சிறப்பான முறையில் நோய்களை கண்டறிய முடியும். அவசர நிலைகளில் மிக வேகமாக செயல்பட முடியும். மேலும் இதயவியல், நரம்பியல் மற்றும் புற்றுநோயியல் ஆகிய பிரிவுகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்புடனும், துல்லியத்துடனும் சிகிச்சை அளிக்க முடியும். இந்த மேம்பட்ட கேத் லேப், நோயாளிகள் மிக துரிதமாக குணமடைவதிலும், குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சைகளைப் பெறுவதிலும், சிகிச்சையின் பலனாக நேர்மறை பலன்களைப் பெறுவதிலும் பெரும் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.