அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் வீடு திரும்பினார்: 3 நாட்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் காலை நடைப்பயிற்சி செய்வார். கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி இதயத் துடிப்பில் ஏற்பட்ட மாறுதலே தலைசுற்றலுக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இதயத் துடிப்பை சரி செய்வதற்கான சிகிச்சை முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் தனது அலுவல் பணிகளை முதல்வர் மேற்கொண்டார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் காணொலி வாயிலாக மக்களைச் சந்திப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி தமிழகம் வந்த பிரதமருக்கு கோரிக்கைகள் நிரம்பிய மனு ஒன்றையும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மூலம் அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுத்து, அதனை பிரதமர் மோடியிடம் அளிக்க செய்தார்.
இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வீடு திரும்பினார். அடுத்த 3நாள் ஓய்வுக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் இன்று (நேற்று) மாலை இல்லம் திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கின்றார், அடுத்த மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என் கடமையை என்றும் தொடர்வேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்க தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதியரசர்கள், அரசு அதிகாரிகள், திரைக்கலைஞர்கள், என் உயிரோடு கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும். உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.