Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள் அமைச்சர்கள்

சென்னை: மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 95வது பிறந்த நாளான 15.10.2025 அன்று காலை 08.45 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக 15.10.1931 அன்று பிறந்தார். அவர் தம் பள்ளிப்படிப்பை இராமேஸ்வரம் நகரில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி, உயர்படிப்பை திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் 1955ஆம் ஆண்டு "விண்வெளி பொறியியல் படிப்பை" தொடங்கி, பின்பு அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்று, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

டாக்டர். ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் மக்களுக்கான அரசின் திட்டங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையே வேறுபாடின்றிச் சென்றடைய வேண்டும் என எண்ணினார். மேலும், குடிநீர், எரிசக்தி சமன் அடையப்பட வேண்டும். விவசாயம், தொழில், சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி, தரமான மருத்துவ வசதி கிடைக்கப் பெற வேண்டும். வறுமை ஒழிக்கப்பட்டு கல்வி வசதிகளுடன் பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 1960ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த இவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்காற்றினார்.

1980ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு, 1981ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பத்ம பூஷண்" விருது, 1990ஆம் ஆண்டு "பத்ம விபூஷண்" விருது ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தது.

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கினார். 1960ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்குத் தேவையான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். SLV. SLV-3. ரோகிணி-1, செயற்கைக்கோள் ஏவுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார். மேலும், திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் இவர் விண்வெளி ஆய்வுத் துறையின் திட்ட இயக்குநராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் தயாரித்துக் கொடுத்தார். டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களை 'கனவு காணுங்கள்' என்று கூறினார். இதனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நீங்கா புகழோடு இடம்பிடித்தார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25 அன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பாரத ரத்னா விருதை" ஒன்றிய அரசு இவருக்கு வழங்கிப் பாராட்டியது.

"பாரத ரத்னா" விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்ற பெருமையைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர், "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் "குழந்தைகளுக்குக் கனவு உண்டு, அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும்" எனக் கூறினார். "அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, வெளிச்சப் பொறிகள், மிஷன் இந்தியா, திருப்பு முனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம், எனது பயணம், உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 2015 ஜூலை 27ஆம் நாள் இயற்கை எய்தினார்.

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தம் திருக்கரங்களால், 15.10.2023 அன்று திறந்து வைத்தார்கள்..

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்களுடன் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.