காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டியையொட்டி அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள், பட்டாசு உள்ளிட்டவை பெறப்படுவதாக புகார் விழுந்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பட்டாசு கடைகளுக்கு உரிமம்பெற தடையில்லா சான்று வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசு பெட்டிகளை பார்வையிட்டு அதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களிடம் விசாரணை நடத்தினர். தீபாவளி பண்டிகை சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையால் அரசு அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.