புதுடெல்லி: முன்ஜாமீன் வழக்குகளை உயர்நீதிமன்றத்தை விட விசாரணை நீதிமன்றம் விசாரிப்பது தான் சரியானதாக இருக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கடன் பெற்ற ஒருவர் அதனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்த நபரை கூலிப்படையை வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல், அவர் நேரடியாக பாட்னா உயர்நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து மேற்கண்ட பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,\\”கூலிப்படையை வைத்து கொலை செய்யும் விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமல் முன்ஜாமீன் வழங்கப்பட்டால், அது கூலிப்படை கலாச்சாரத்தை அதிகரித்து வாய்ப்பாக அமைந்து விடும். இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் விசாரணை நீதிமன்றம் முதலில் முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும். எனவே முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்யும் வழக்குகளை முதலில் விசாரணை நீதிமன்றம் விசாரிப்பது தான் சரியானதாகும். எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.