Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அந்தியூர் அருகே 150 ஆண்டு பழமையான மரம் வெட்டுவதில் இரு தரப்பினர் மோதல்

*சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்

அந்தியூர் : ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி செம்புளிசாம் பாளையம் ரோட்டில் மொசபாளியூர் பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலான அரச மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் அத்தாணி வனத்துறைக்கு சொந்தமான ரோட்டில் வனத்துறையினர் அத்தாணி பேரூராட்சி ஒப்படைக்கப்பட்ட சாலையில் உள்ளது.

இந்த மரத்தின் அருகில் இருந்த வீடுகளில் இந்த அரச மரத்தின் வேர்கள் பல இடங்களில் வீடு, அடுக்குமாடி கட்டிடங்களில் செடிகள் வேர்களினால் முளைத்துள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர் இந்த அரச மரத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படுவதால் மரத்தை வேறு இடத்தில் பிடுங்கி நடுவதற்கு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் மரத்தை அகற்றுவதற்கு ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, அந்தியூர் வனத்துறையினருக்கு அனுமதி கடிதம் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் அத்தாணி பாரஸ்டர் பாரதி மற்றும் வனப் பணியாளர்கள் மரத்தினை மேல் பகுதிகளை மட்டும் வெட்டுவதற்காக வந்தனர். அப்போது மரத்தை வெட்டக்கூடாது என அதே பகுதியைச் சேர்ந்த சிலர், அரச மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு, மரத்தை வெட்டினால் எங்களையும் சேர்த்து வெட்டுங்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தை வெட்டி வேறு இடத்தில் நட கோரிக்கை விடுத்து எதிர்தரப்பினர் செம்புளிச்சாம் பாளையத்தில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் மொசப்பாலியூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இவர்களிடம் அத்தாணி பாரஸ்டர் பாரதி மற்றும் வனத்துறை பணியாளர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்திற்கு போலீசாரின் பேச்சு வார்த்தையால் சமரசம் அடைந்து மரத்தினை வெட்டுவதற்கு அனுமதித்தனர்.

இதன் பின்பு அரச மரத்தின் மேல் பகுதி வெட்டப்பட்டது. பழமையான மரத்தை வெட்ட முயற்சித்தபோது இரு தரப்பினரிடையே பிரச்னை உருவானதால் அப்பகுதியில் பகுதியில் பரபரப்பு நிலவியது.

வேறு இடத்தில் நடவு

நேற்று மேல் பகுதி மட்டும் வெட்டப்பட்ட அரசமரம் வெட்டுப்பட்ட பகுதிகள் துளிர் விட்டவுடன் இரண்டு மாதங்களில் அத்தாணி வனப்பகுதி பொன்னாட்சி அம்மன் கோயில் நீர்நிலைப் பகுதியில் வேருடன் பிடுங்கி நடப்பட உள்ளது.