Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நலன் காக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியீடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை: தூய்மைப்பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர் களின் சங்கங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். தூய்மைப்பணியாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக, அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி பியூலா ஜான் செல்வராஜ், சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயசங்கர், சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி புருசோத்தமன்,

தொழிலாளர் காங்கிரஸ் டிரேட் யூனியன் நிர்வாகி ஜெயகுமார், சென்னை மாநகராட்சி அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செங்குட்டுவன், உள்ளாட்சித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சரவணன், சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ராமு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி அன்புதாசன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர்,

துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தூய்மைப்பணியாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற்றிட, தாயுள்ளதோடு தங்களுடைய நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு மகிழ்வு கடிதத்தினை அளித்தனர்.

இதுகுறித்து முதல்வருக்கு அளித்த மகிழ்வு கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூய்மைப்பணியாளர்களான எங்களுக்கு நீங்கள் தந்த திட்டங்களால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. முத்தாய்ப்பாக தனியாக எங்களுக்கென்று நல வாரியத்தை உருவாக்கியதற்கு, காலம் முழுவதும் நன்றி சொல்வோம்.

* எங்கள் உடல் நலனைக் காக்க தொழில்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டம்

* பணியின் போது உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் நிதி பாதுகாப்பு

* சுயதொழில் தொடங்குவதற்கான அதிகபட்சம் 73.5 லட்சம் வரை மானிய உதவிமற்றும் குறைந்த வட்டியில் கடன்

* எங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்கான கட்டண உதவி

* அடுத்த 3 ஆண்டுகளில் 32,000 வீடுகள் வழங்கும் வீட்டு வசதி திட்டம்

* பணியின்போது இலவச காலை உணவு வழங்கும் திட்டம் ஆகியவை எங்கள் வாழ்வாதாரத்தையும், எதிர்கால நலனையும் உறுதி செய்யும் முக்கியமான முன்னெடுப்புகள்.

இந்த திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் உறுதியுடன் எங்களை மதித்து எங்களுடைய நீண்ட கால கோரிக்கையினை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தமைக்காக மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கும் செய்யப்படுவதைப் போல எங்கள் ஊதியத்தையும் காலத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு, தூய்மைப்பணியாளர்களை தாய்மை பணியாளர்கள் என போற்றுகின்ற முதல்வர் உறுதி செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் நம்புவதைப் போல் பெருநகர மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்களும் நம்புகின்றோம்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் காத்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உடனிருந்தனர்.

* ‘உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம்’ முதல்வர் மு.கஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:  ‘‘தூய்மைப்பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தேன். நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.