அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த மாஜி துணைவேந்தர், மனைவி மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிரடி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி செய்ததாக, பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த தனசேகர் என்பவர், தனது மகள்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தரும்படி முன்னாள் துணைவேந்தர் கலாநிதியை அணுகியுள்ளார். கலாநிதி கடந்த 1999 மற்றும் 2002ம் ஆண்டு காலத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர்.
அப்போது, தனக்கு தெரிந்த அதிகாரிகள் உதவி மூலம் வேலைகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த கலாநிதி, அதற்காக முதற்கட்டமாக ரூ.40 லட்சம் பெற்றுள்ளார். மேலும், தனசேகருக்குத் தெரிந்தவர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்கள் மூலமாகவும் பணம் வசூலித்துள்ளார். இவ்வாறு பலரிடமிருந்தும் முன்னாள் துணைவேந்தர் கலாநிதியும், அவரது மனைவியும் சேர்ந்து மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் வரை பணத்தை பெற்று ஏமாற்றி விட்டார். இதுகுறித்து தனசேகர் அளித்த புகாரின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
காவல்துறையினர் தனது புகாரை கிடப்பில் போட்டதால், தனசேகர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மயிலாப்பூர் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மயிலாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில், முன்னாள் துணைவேந்தர் கலாநிதியும் அவரது மனைவியும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனசேகரிடமிருந்து ரூ.2.5 கோடி பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


