சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் “சென்டர் பார் அப்பிலியேஷன்” என்ற மையத்தின் மூலமாகவே பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் பணி வழங்கப்படுகிறது.
இந்த மையத்தின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், பல பேராசிரியர்கள், முன்னாள் பதிவாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரமானது, கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு, பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே வழங்கப்பட வேண்டும் .
ஆனால், அங்கீகார மையத்தில் உள்ள இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு , இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறாமல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது . பல கல்லூரிகள் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன . குறிப்பாக, ஒரே ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளில் நிரந்தரப் பேராசிரியராகப் பணியாற்றுவது போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் 2023-24 காலகட்டங்களில் நடந்திருப்பதாக விசாரணையில் அம்பலமாகி உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள மொத்த 480 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 47%* ஆகும். தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.


