Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைப்பு கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, ‘product development’யை முக்கிய குறிக்கோளாக கொண்டு ‘Capstone Design Project’ 5வது பருவத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான திட்ட குழு பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு உருவாக்கப்படுவதால், இது அவர்களிடம் பல்துறை அணுகுமுறையும் குழுவாக சேர்ந்து வேலை செய்யும் பண்பையும் ஊக்குவிக்கும். Capstone Design Project-களின் மூலம் பெறப்படும் மதிப்பெண்களையும் சேர்த்து, 8.5 அல்லது அதற்கு மேல் CGPA பெற்றவர்களுக்கு பொறியியல் பட்டத்துடன் கூடுதலாக சிறப்பு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு ஆங்கில மொழி வளமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இணைப்பு கல்லூரிகளில் வெளிநாட்டு மொழி பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இருந்தே பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களை கொண்ட குழுக்கள் உருவாக்கப்படும். இந்த குழுக்கள் புதுமைப்பாங்கிற்கான மறுபொறியியல் என்ற பாடத்தின் கீழ் செயல்முறை பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு பருவங்களில் தொழில்துறை சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி அடித்தளத்துடன் இணைந்து தொழில்நுட்ப, தொழில்முறை மற்றும் தனிநபர் திறன்களை மேம்படுத்துவதற்காக மாணவர்களுக்கு வழங்கும் திறன் மேம்பாட்டு பாடங்கள், தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இளநிலை பொறியியல் பாடத்திட்டத்தில், ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தரநிலைகள் எப்படி பயன்படுத்தப்படுகிறதென அறிய, பாடத்திட்டத்தில் தொழில்துறை தரநிலைகள் குறித்த தனி பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தொழில்முறையில் பயன்படுத்தப்படும் பொறியியல் தரநிலைகள் மற்றும் குறியீடுகளை சரியாக பயன்படுத்தவும் கற்றுக்கொள்வார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்துடன் கூடுதலாக, இன்றைய பொறியியல் பட்டதாரிகளுக்கு வேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொள்ளவும், வெற்றிபெறவும், வளரவும் அத்தியாவசிய வாழ்க்கை திறன்கள் தேவை. வாழ்க்கை திறன்கள் குறித்த படிப்புகள் முதல் இரண்டு செமஸ்டர்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதன்மூலம் மாணவர்கள் உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். முதல் முறையாக, மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு உடற்தகுதியை மேம்படுத்தவும் பொறியியல் பாடத்திட்டத்தில் உடற்கல்வி படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக கல்வி திட்ட குழு அண்மையில் நடந்த கூட்டத்தில் இது குறித்து ஆழ்ந்து பரிசீலித்து பாடத்திட்டங்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.