சென்னை: பேராசிரியர்கள் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-26ம் ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்பிற்கான இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த கல்லூரியில் கட்டமைப்பு, ஆசிரியர்கள் போன்ற விபரங்களை கல்லூரிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் ஆசிரியர்களின் விபரங்கள், ஆதார் எண், அண்ணா பல்கலைக்கழக அடையாள எண், ஆசிரியர்களின் சம்பள பட்டியல் ,வங்கி கணக்கு போன்ற பல்வேறு தகவலுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்து, அதிகமான மாணவர்கள் பங்கேற்க கூடிய பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பேராசிரியர் பற்றாக்குறை, நூலகங்களில் குறைபாடு, ஆய்வகங்களில் குறைபாடு என்று பல்வேறு குறைகள் இருக்கக்கூடிய 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இந்த கல்லூரிகள் அவர்களுடைய குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக உயர்தல்வித்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இந்த 141 கல்லூரிகள் எவை எனத் தெரியாத சூழலில், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 45 நாட்களுக்குள் குறைகளை சரி செய்யாத ஒரு சூழல் ஏற்பட்டால், அந்த கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விவாகரத்தில் 141 கல்லூரிகளும் போர்க்கால அடிப்படையில் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.