அண்ணாவின் 117வது பிறந்தநாள் அண்ணா சாலையில் உள்ள திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை
சென்னை: அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி நாளை, அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்தார். தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.
கலைஞரின் ஆட்சிக்காலத்தில், அண்ணா கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அண்ணாவின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம், மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை அமைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, 26.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.