திருவண்ணாமலை கோயில் மகா தீபத்தை தொடர்ந்து தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபத்தை தொடர்ந்து நேற்றிரவு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவுர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர். நினைக்க முக்தித்தரும் திருத்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக நேற்று மகாதீப பெருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வான மகா தீபப்பெருவிழா நேற்று மாலை நடந்தது.
மாலை 5 மணி முதல், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் கோயில் 3ம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் அடுத்தடுத்து எழுந்தருளினர். பின்னர் உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.57 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் துதியும், பாமாலையும், சங்கொலியும் முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகா தீபம் ஏற்றினர். கிரிவலப்பாதையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலைமீது காட்சியளித்த மகாதீபத்தை தரிசித்தனர். மகாதீப பெருவிழாவை தரிசிக்க, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.
நள்ளிரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் பிரியாவிடை தங்க ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 7.58 மணிக்கு தொடங்கி, நாளை (5ம் தேதி) காலை 5.37 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் பக்தர் நேற்று முதல் விடிய விடிய கிரிவலம் வந்தனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் தரிசன வரிசை மாடவீதி வரை நீண்டுள்ளது. இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
11 நாட்கள் காட்சி தரும் மகா தீபம்
திருவண்ணாமலை மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். அதன்படி, வரும் 13ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலைமீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, சிறப்பு பூஜைகளுடன் தினமும் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். எனவே, திருவண்ணாமலைக்கு 11 நாட்களும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

