Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவரை திட்டுவதா? அண்ணாமலையை விட 1 ஓட்டு அதிகம் வாங்க முடியுமா?: நிர்மலாவுக்கு சவால் விடும் ஆதரவாளர்கள்

சென்னை: தமிழகத்தில் பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில்தான் கோவையில், தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், பன்னுக்கு தடவப்படும் ஜாமுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று கூறினார். அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள் அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனிப்பு கேட்டார். இந்த வீடியோவும் வெளியானது. தனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை செயல்படுவதாக நர்மலா சீதாராமன் அதிருப்தியில் இருந்தார்.  கடந்த சனிக்கிழமை நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசினார். அதோடு, தமிழகத்தில் 20 சீட், 25 சீட் ஜெயிப்போம் என்றார்கள். பூஜ்ஜியம்தான் கிடைத்தது. நம் கட்சியின் பலம் தெரியாமல் நிர்வாகிகள் இருந்தனர். தற்போதைய நிர்வாகிகள் தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணாமலை கலந்து கொள்ளாத கூட்டத்தில் அண்ணாமலை பெயர் சொல்லாமல் விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டெல்லியில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் புகார் செய்துள்ளனர். இதனால் டெல்லியில் தமிழக பாஜ உயர்மட்டக்குழு கூட்டத்தை அமித்ஷா இன்று கூட்டியுள்ளார். இந்தநிலையில், நிர்மலாவுக்கு அண்ணாமாலையின் ஆதரவாளர்கள் சவால் விட்டுள்ளனர். அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘மக்களவை தேர்தலை சந்திக்காமல், மக்களை சந்திக்காமல், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். அவருக்கு மக்களைப் பற்றியும், மக்களின் உணர்வுகளைப் பற்றியும் என்ன தெரியும். ஆனால் அண்ணாமலை அப்படி இல்லை. அவர் மக்கள் தலைவர். மக்களுடன் இணைந்து பணியாற்றியவர். செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் கோவை பகுதியில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார். அதேபோல, நிர்மலா சீதாராமனின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் தொகுதியில் அவர் போட்டியிட்டு, அண்ணாமலையை விட ஒரு ஓட்டாவது நிர்மலா சீதாராமன் வாங்கிக் காட்ட முடியுமா என்று சவால் விடுகிறோம். இந்த சவாலை ஏற்காவிட்டால், எங்கள் தலைவரைப் பற்றி அவர் பேசவே கூடாது. அவரால்தான் தமிழகத்தில் மக்களிடம் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. மீனவர் புகார் கூறும்போது, வாயை மூடு என்று பேசினார்.

இதனால் மீனவர்கள் நமக்கு எதிராக பேசினார். மக்களை மதிக்காமல் மேடையில் பேசிவிட்டு செல்லக் கூடியவர் நிர்மலா சீதாராமன். மூப்பனாரை பிரதமராக விடாமல் திமுக தடுத்து விட்டது என்று கூறினார். இப்போது, வாசன் நம்மிடம்தான் உள்ளார். அவர் எம்பியாகவும் உள்ளார். அவரை நீங்கள் ஏன் அமைச்சராக்கவில்ைல என்று கேட்டால் நாம் பதில் கூற முடியுமா. தமிழக அரசியல் தெரியாமல் ஏதாவது பேசிவிட்டு சென்று விடுகிறார். முதலில் தமிழக அரசியல் படிக்கட்டும். அதன்பின்னர் அண்ணாமலையை எதிர்க்கட்டும். மோடி, அமித்ஷாவிடம் எங்கள் தலைவர், நிதியமைச்சரைப் பற்றி விரைவில் நேரடியாக புகார் தெரிவிப்பார்’’ என்றனர்.