சென்னை: அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சுவாமி சகஜாநந்தர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தில் துவக்கப்பட்டது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். நூற்றாண்டு காண இருக்கும் அந்தப் பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பிறகு அதிமுக அரசு அந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தனர்.
ஆனால் இப்போதோ முன்பிருந்ததில் பாதி எண்ணிக்கையில் கூட மாணவர்கள் இல்லை. அங்கு செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத அணுகுமுறை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அதில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் ஒன்று. அதனால் அதன் நிர்வாகம் முடங்கிப் போயிருக்கிறது. இந்தியாவில் உயர் கல்வியில் தமிழ்நாடு தலை சிறந்து விளங்குவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ஒரு காரானமாகும். அத்தகையப் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் இப்படி சீர் குலைந்து கிடப்பது வேதனை அளிக்கிறது.
தற்போது அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்; பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான சி ஏ எஸ் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்; அயல் பணியிடங்களுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களை ஆங்காங்கே கல்லூரிகளில் நிரந்தரம் ஆக்க வேண்டும்; பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அயல் பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யுஜிசி விதிமுறைகளின் படி நிரப்ப வேண்டும்; ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பணப் பயன்களை வழங்க வேண்டும் - உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
ஆசிரியர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் கனிவோடு பரிசீலித்து நிறைவேற்றித் தர வேண்டும். இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
